விராஜ் வாழ்கிறார்..!

விராஜ் என்ற மனிதருக்குள் இருந்த சிந்தனையோட்டங்களை முழுமையாகப் புரியமுடியாவிட்டாலும், அவரது செயற்பாடுகளைப் பின்பற்றினாலே போதுமானது. அது எம்மைச் சரியாக வழிநடத்திச் செல்லும். அதை அனுபவங்களினூடாகக் கண்டவர்கள் நாம்.

முதன்முதலில் நான்கு மொழிகளில் தமிழனப்படுகொலைக் கையேடு உருவாக்கப்பட்டபோது, அதற்கு Genocide Chronicle எனப் பெயர்வைத்தவர் விராஜ். அவரது எண்ணங்களின் பிரதிபலிப்புத் தான் அக்கையேடு செழுமையாக வெளிவரக் காரணமாகும். அவ்வாறே தமிழினப்படுகொலை ஆவணப்படுத்தலுக்கென்று ஓர் தளம் தேவையென நாம் சிந்தித்தபோது, “Eelam Tamil Platform for the Documentation of Genocide” எனப் பெயர் சூட்டியவரும் அவரே.

2021 ஆம் ஆண்டு யேர்மனியின் Berlin நகரில் இடம்பெற்ற தீர்ப்பாய அமர்விற்கான ஏற்பாடுகளில் நாம் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை, நிதி நெருக்கடியின் காரணமாக ஒரு சில பணிகள் நகராமற் கிடந்தன. ஒட்டுமொத்தமாக 60,000 யூரோக்கள் தேவை எனத் திட்டமிட்டுத் தொடங்கப்பட்ட பணியானது  அரைப்பங்கு நிதியை மட்டுமே திரட்டி முழுமையடையாமல் கிடந்தவேளை, அவர் அந்நிதிக்காக அலையத் தொடங்கினார்.

வேற்றுநாட்டவர்களிடமும்,  ஈழ விடுதலையின் பால் பற்றுக்கொண்டிருந்த சிங்கள நண்பர்களிடமும் கையேந்தினார். ஈழத் தமிழரின் விடுதலைக்காக, ஈழத்தமிழர்களே செய்யமுடியாத பணிகளையெல்லாம் சுமந்து, அவரது பெயரில் கடன்பட்டு அந்தத் தீர்ப்பாயத்தை நடாத்தினார். தமிழீழத்தின் பாதுகாவலர்களாக புலிகள் அழிக்கப்படுவதற்கு அமெரிக்காவும் பிரித்தானியாவுமே அடிப்படைக் காரணம் என இறுதியில் நிறுவினார். வெறுமனே சிறிலங்கா அரசை மட்டும் சபித்துக்கொண்டு வாழும் ஈழத்தமிழரின் எண்ணங்களுக்கு  எட்ட முடியாத அளவிற்கிருந்த தொலைவுச் சதிகளை அடையாளம் காட்டியவர் விராஜ்.

“புலிகளை அழித்தமையாலேயே இலங்கைத் தீவில் சமாதானம் அழிந்தது” என்ற கோணத்திலிருந்த  அவரது  சிந்தனைத்திறன், பலரது சிந்தனைகளைத் தூண்டின. முழுத் தீவிலும் சமாதானத்தைக் கொண்டுவருவதற்கே புலிகள் போராடினர் என்ற அவரது வாதம் சிலருக்குப் புரியாமல் போனாலும், பலர் அவரது சிந்தனையைக் கண்டு வியந்தனர்.

நந்திக்கடலில் எமது போராட்டம், உயர்ந்த இலட்சிய வெற்றியைத் தழுவியது என்பதை அவர் முழுமையாக நம்பினார். பிரபாகரன் எனும் வீரனின் பண்புகளில் உள்ள நம்பிக்கை அது. Diaspora திரண்டெழுந்து நந்திக்கடலைப் பின்பற்ற வேண்டுமென அவர் மிகுந்த எதிர்பார்ப்போடிருந்தார். ஆனால் Diaspora பயத்தின் நிமித்தம் கட்டியாக இறுகிவிட்டது என அவர் அறிந்துக்கொண்டார்.

அதிலும் பல அமைப்புகள் மேற்குலக “அடிபணிவு” அரசியலுக்குள் பலியாவதை அவர் வேதனையுடன் எதிர்கொண்டார். ஆனால் அவர் தனது முயற்சியைத் தளரவிடவில்லை. 2014 இல் யேர்மனியின் Bremen நகரில், பன்னாட்டு நீதிபதிகள் குழுவை வரவழைத்து, “தமிழீழத்தில் நடந்தது இனப்படுகொலையே” என நிறுவினார். இன்றுவரை தமிழினப் படுகொலையை நிறுவிய ஒரேயொரு தீர்ப்பாயம் இதுவேயாகும்.

“மென்டிஸ் என்பவர் புலிகளது ஆதரவாளர்” என்ற பொருள்படவே பலர் அவரை அறிமுகம் செய்வதுண்டு. ஆனால் அவர் உண்மையில் தனியே புலிகளின் ஆதரவாளர் அல்ல. யார் உலக சமாதானத்திற்காகப் பாடுபடுகிறார்களோ அவர்களையெல்லாம் அவர் அரவணைப்பார். அப்படித்தான் அவர் புலிகளையும் ஏற்றுக்கொண்டார்.

பிரபாகரன் என்ற மனிதரின் சிந்தனைகள் எவ்வாறு தமிழின அழிப்பிற்கெதிராகத் தொலைநோக்குடன் தோன்றினவோ, அவ்வாறே பிரபாகரன் சிந்தனைகளை மென்டிஸ் அவர்கள்  மேற்குலகிற்கு எடுத்தியம்பினார்.  தமிழீழத்தின் தலைநகரம் திருகோணமலையாக இருப்பதே சிறந்தது என்பதை, பூகோள அரசியல் எனும் கடிகார முட்களின் அசைவியக்கத்திற்கு ஏற்பப் புரியவைத்தார்.

“Don´t use a powerfull landmine, to split the water” என்பார். அதற்குள் நிறையவே பொருளடக்கம் உண்டு.  “தேவையற்ற விடயங்களில் உன் கவனத்தைச் செலுத்தாதே என்பதுதான் அதன் பொருள்”. தேவையற்றவை தானாகவே விலகிவிடும் என்பதும் அதன்பொருள்.

“Distanicing from LTT is also a crime” என்று அவர் கூறியதைப் பலர் புரிந்துகொள்ளவில்லை.  தமிழின அழிப்பிற்கு எதிராகப் போராடிய புலிகளின் கொள்கைகளை ஈழத்தமிழர்கள் ஒருபோதும் கைவிவிட்டு விடக்கூடாது என்பது அதன் பொருள்.

2009 இற்கு முன்னர் , மேற்குலக நாடுகளில் புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்குத் துணைசெய்யும் வகையில் நிதி திரட்டியவர்கள் மீது வழக்குகள் கண்மூடித்தனமாகப் பாய்ந்தன.  மேற்குலக வாழ் தமிழ்ச் சமூகமே பயத்தில் உறைந்தது. “defeat the fear, as pirapakaran said” என்று எல்லோருக்கும் அறிவித்தார். ஆனால் புரிந்துகொண்டவர்கள் ஒரு சிலரே. அவர் கூறியவாறே , சுவிஸ் நாட்டில் ஈழத்தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட வழக்குகளிற்கு எதிராகப் போராடினார். இறுதியில் சுவிஸ் நாட்டில் புலிகளின் மீது சுமத்தப்பட்ட அவதூறு விலகியது.

ஈழத்தமிழர்கள் ஓவ்வொரு ஆண்டும் ஐ.நா நோக்கி “நீதி கோரி”  பேரணி நடத்துவார்கள். ஐ.நா என்பது தரகு அமைப்பு என்பதை அவர் அடிக்கடி வெளிப்படுத்தியிருக்கிறார். “ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீது விதித்த தடையே தமிழின அழிப்புக்கு வழிகோலியது” என்பது அவரது அசைக்கமுடியாத வாதம்.  தமிழர் கடல் (Indian ocean) அமைதி வலயமாக இருக்க தமிழர்கள் ஒன்றுதிரண்டு நிற்கவேண்டுமென அறைகூவல் விடுத்தார். அதன்வழியேதான் பூகோள அரசியல் பயணப்படுகிறது என்பதைப் பல இடங்களில் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

மாமனிதர் Taraki சிவராம் அவர்களது நெருங்கிய நண்பர் விராஜ் ஆவார்.  சிவராம் அவர்களது சாவு விராஜ் அவர்களை மிகவும் பாதித்தது. சமபலத்தில் இருந்த புலிகளைப் பலவீனப்படுத்தவென்றே உருவாக்கப்பட்ட “சமாதானம்” எனும் பொறியை அடையாளம் கண்டுகொண்ட புலிகள், அதனை எதிர்த்து நின்ற விதம் பற்றிய இருவரின் சிந்தனைகளும் ஒரே வகையானவை.

அவரது சிந்தனைகளுக்கு ஒப்பவே நாதன் தம்பி மற்றும் ஆனந்தராசா ஆகியோர் யேர்மனிய அரசின் அவதூறு வழக்கினை எதிர்த்துப் போராடத் தலைப்பட்டனர்.  “புலிகளுக்கு நிதி திரட்டியது குற்றம்” என யேர்மனிய அரசு கூற, “புலிகளுக்கு நிதி திரட்டுவது எமது உரிமை” என அப்பிடியே விடயத்தைத் திருப்பிப் போட்டவர் விராஜ். ஈழத்தமிழர்கள் குற்றவாளிகள் என ஐரோப்பிய ஒன்றியம் கூற, ஈழத்தமிழர்களது காவலர்களாக புலிகளை அழித்ததன் மூலம் தமிழினப்படுகொலை நிகழ வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்த ஐரோப்பிய ஒன்றியமே குற்றவாளி என எதிர்வழக்குத் தொடுத்தார் விராஜ் அவர்கள்.

1977 ஆம் ஆண்டு தொடங்கி மேற்குலகிற்கு ஏதிலிகளாக வந்த தமிழர்களின் தஞ்சக்கோரிக்கைக்காக அவர் போராடியிருக்கிறார். எண்ணிக்கையில் அறிந்த வகையில் 350 இற்கும் மேற்பட்ட தஞ்சக்கோரிக்கைகளை உறுதிசெய்து, ஈழத்தமிழர்கள் மேற்குலக நாடுகளில் நிம்மதியாக வாழ வழிசெய்துகொடுத்திருக்கிறார்.

உலகத்தமிழர் உரிமைக்குரல் எனும் அமைப்பை நாம் உருவாக்கியதன் அடிப்படை அவரைச் சார்ந்தது.  அவரது கொள்கைகளைப் புரிந்துகொள்ளாத, அவரது சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவமற்ற மனிதர்கள் மற்றும் ஈழத்தமிழ் அமைப்புகள், அவரைப் பயன்படுத்திவிட்டு பின்னர்  நழுவிச் செல்வது வழக்கம். அதனால் காலத்திற்குக் காலம் அவருக்கும் ஈழத்தமிழர்களுக்குமிடையிலான இணைப்பு சீராக அமையவில்லை. அல்லது அமைவதற்கு ஈழத்தமிழர் அமைப்புகள் அவரை உரிய முறையில் பின்தொடரவில்லை. ஆனாலும் பல நாடுகளில் இருந்த ஈழத்தமிழர் தரப்புகள் அவரோடு இணைந்து உழைத்தன. குறிப்பாகச் சொல்வதானால்; Tamilnet செய்தி நிறுவகம் அவரது அத்தனை முயற்சிகளுக்கும் தோள்கொடுத்திருக்கிறது.

ஈழத்தமிழர்களின் போராட்ட நியாயப்பாடுகளை, அவர் உலகெங்கும் உள்ள வேற்றின மக்களுக்குத் தெளிவுபடுத்தி அதில் வெற்றியும் கண்டார். இலத்தீன் அமெரிக்க நாடுகளில் அவருக்கு ஏராளமான நண்பர்கள் இதனால் உருவாக்கியிருந்தனர்.

முதன்முதலில் அவரை முதன்மை ஆலோசகராக ஏற்று உருவாக்கப்பட்டதே Voice அமைப்பாகும். 2018 ஆம் ஆண்டு Voice அமைப்பானது தொடங்கப்பட்ட நாள்முதல், அவர் இயற்கையோடு நிறைந்த நாள்வரைக்கும் எமது அமைப்பு அவரது வழிகாட்டலைச் சிரமேற் கொண்டு செயற்பட்டிருக்கிறது. அவருக்குத் தேவையானவற்றை முடிவந்தவரையில் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறது. அவரோடு தேவைப்படும் இடமெல்லாம் பயணித்திருக்கிறது. அவர் எம்மிடம் விட்டுச் சென்ற பணிகள் ஏராளம் மீதமுண்டு. அவற்றையெல்லாம் முழுமையாக நாம் நிறைவேற்றுவோமா என்பதை உண்மையில் உறுதியாகச் சொல்லமுடியாது. ஆனால்; அவரது கொள்கைகள், நம்பிக்கைகள், சிந்தனைகள் என்பவனவற்றில் இருந்து நாம் ஒருபோதும் தடம்புரள மாட்டோம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

Voice Of Global Tamil Rights – உலகத்தமிழர் உரிமைக்குரல்
Eelam Tamil Platform for the Documentation of Genocide – தமிழினப்படுகொலை ஆவணத்தளம்

Comments

There is 1 comment for this article
  1. Pingback: Viraj, he must stay… – 30sec2remember

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.

Go to TOP
de_DEGerman